திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முகமது சிப்லி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தின்போது ஆண்டுதோறும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மசூதிகள் அதிகம் உள்ள பாதையில் விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால்தான் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன; எனவே, மாற்றுப் பாதையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “மனுதாரர் தெரிவிக்கும் மாற்றுப் பாதை யோசனையை உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
“முத்துப்பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளையும், உயிர்களையும் பாதுகாப்பது வருவாய்த் துறை மற்றும் போலீஸôரின் கடமை’ என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் பெரும்பாலான இந்துக்கள் ஒப்புக்கொண்ட பிறகும், நாங்கள் தெரிவித்த மாற்றுப்பாதை யோசனையை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை.
இந்து முன்னணியின் தலைவர் ராம. கோபாலன் தலையீட்டிற்குப் பிறகு பழைய பாதையிலேயே விநாயகர் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தனர். விநாயகர் ஊர்வலம் 02.09.09-ல் நடைபெற்றது. அப்போது, ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மசூதி மற்றும் கடைகளும் தாக்கப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததாலேயே விநாயகர் ஊர்வலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன், மாவட்ட எஸ்.பி. பிரவீண் குமார் அபினவ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன், நீதிபதி எம். எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ். பிரபாகரன், வி. காசிநாதபாரதி ஆகியோர் ஆஜராயினர். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது
Last Updated :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக