வெள்ளி, 23 அக்டோபர், 2009

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி !
மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக