புதன், 8 பிப்ரவரி, 2012இந்திய ஹாஜிகளோடு உளவாளிகளா?


உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேஷியா. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 20 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தோனேஷியாவில் 90 சதவீதம் பெரும்பான்மையினராக முஸ்லிம்களே வாழ்வதால் அதில் சிறப்பு எதுவுமில்லை. ஆனால், இந்துக்கள் 75 சதவீதம் பெரும்பான்மையினராக வாழும் இந்தியாவில்; சிறுபான்மையினராகவும், சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம்கள் வாழ்வதுதான் சிறப்பு.

தாங்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு தேசத்தில்; தங்களின் அடையாளங்களை இழக்காமல், உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டே தங்களை முஸ்லிம்களாக முன்னிறுத்திக் கொள்ளும் அவர்களது உறுதி உலக முஸ்லிம்களுக்கே முன்மாதிரி என்றால் அது மிகையில்லை. தங்களை கொள்கையால் முஸ்லிம்கள் என்று துணிந்து முழங்கும் அதே வேளையில்; தங்களை இந்தியர்கள் என்று துணிந்து முழங்குவதிலும் அவர்கள் உறுதிமிக்க தேசப்பற்றாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களின் தூய்மையான தேசப்பற்றை சில மதவெறி சக்திகள் களங்கப்படுத்தினாலும் அவர்களது நேர்மையில் மாற்றமில்லை.

ஆனால் "செப்டம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலுக்குப்" பிறகு உலகெங்கும் பயங்கரவாத பீதி திட்டமிட்டு ஏகாதிபத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தை பயங்கரவாதப் பாசறையாகவும், முஸ்லிம்களைத் தீவிரவாத சக்திகளாகவும் பார்க்கும் மனநோயாளிகளின் வரிசையில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

முஸ்லிம் அமைப்புகளை நடத்தும் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. மதரஸாக்கள் கண்காணிக்கப்படுகின்றன. பல உலமாக்கள் பின்தொடரப்படுகிறார்கள். ஆனால், இந்த கோழைத்தனமான செயல்பாடுகளைக் கண்டு யாரும் கலங்கிடவில்லை. மாறாக மேலும் உறுதி பூண்டு தங்களின் பணிகளை செய்கிறார்கள். இப்போது வெளிவந்திருக்கும் புதிய செய்தி என்னவெனில், இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகளை உளவுபார்க்கும் வகையில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளை ஹாஜிகள் போர்வையில் உளவு அமைப்புகள் அனுப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகவே இவ்வாறு நடப்பதாகவும், இவ்வருடம் அங்கு கூடிய தமிழக ஹாஜிகளுக்கு மத்தியில் அப்படி ஒரு உளவாளியை இவ்வருடம் சந்திக்க நேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து செல்லும் ஹாஜிகள் அங்கு என்ன செய்கிறார்கள்? வெளிநாட்டு ஹாஜிகளோடு என்ன பேசுகிறார்கள்? அங்கு வேறெதுவும் அரசியல் சந்திப்புகள் நடக்கிறதா? என்பதெல்லாம் உளவாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காஷ்மீரிலிருந்து புறப்படும் ஹாஜிகளுக்கு மத்தியில் இப்படி உளவாளிகள் அனுப்பப்படுகிறார்கள் என்ற பேச்சு இருந்தது. இப்போது எல்லா மாநிலங்களிலிருந்தும் ஹாஜிகளைக் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது.

முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மிகுந்த பயபக்தியோடும், ஒழுக்க விதிகளோடும், வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதி ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தங்கள் ஹஜ் பயணத்தில் வணிகம் செய்ய மார்க்கம் அனுமதித்திருந்தும் அதைச் செய்வதில்லை. ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு வேறுபல நாடுகளுக்கு சுற்றுலாச் செல்ல வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதில்லை. வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி, அந்த மனதிருப்தியோடு தாயகம் திரும்பி, தங்கள் உற்றார் உறவினர்களை சந்திப்பதில் அவர்கள் திருப்தியுறுகிறார்கள்.

அவர்கள் மெக்காவிலோ, மதீனாவிலோ அரசியல் நிகழ்வுகளில்; சொற்பொழிவுகளில் பங்கேற்க சவூதி அரசு அனுமதிப்பதில்லை. புனிதப் பயணத்தில் வணக்க வழிபாடுகளைத் தவிர்த்த இதர விஷயங்களாகப் பேச ஹாஜிகளும் ஆர்வப்படுவதில்லை. அங்கு கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தையும் இறைவனை துதிப்பதிலேயேதான் அவர்களது கவனம் இருக்கும். இதுவே இந்திய ஹாஜிகளின் யதார்த்த நிலையாகும். இந்திய ஹாஜிகள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இருந்தும் வரக்கூடிய ஹாஜிகளின் நிலையும் இதுதான். உண்மைகள் இப்படியிருக்கும் போது, இந்திய ஹாஜிகளை உளவு பார்ப்பது என்பது இந்திய முஸ்லிம்களின் இதயத்தை ஈட்டியால் குத்தும் செயலாகும். அவர்களது தேசப்பற்றையும், ஹஜ் பயணத்தின் நேர்மையையும் சந்தேகிப்பது அயோக்கியத்தனமான & கண்டிக்கத்தக்க செயலாகும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பவேண்டும். உண்மை என்ன என்பது குறித்து இந்தியப் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும். இது பிரதமரின் அனுமதியோடுதான் நடக்கிறதா? அல்லது ஐ.பி. மற்றும் ரா உளவு அமைப்புகளில் செயல்படும் மதவெறி பிடித்த அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவின்படி நடக்கிறதா? என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது உண்மையென தெரிந்தால், மத்திய அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இதுபோன்ற ஈனத்தனமான நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் மார்க்கக் கடமையை உளவுபார்ப்பதையும், தேசப்பற்றை சந்தேகிப்பதையும் அனுமதிக்க முடியாது.


மக்கள் உரிமை தலையங்கம் ஜன. 27 - பிப். 2, 2

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை த. மு. மு. க. அவசரஊர்தியில் இறந்தவரின் உடலை ஏற்றிவரும்போது விபத்துக்குள்ளாகி, ஊர்தியின் ஓட்டுனர் சகோதரர் அப்துல் ரஷீத் அகால மரணம் அடைந்துவிட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இளைகி ராஜிஊன்) அவரின் மறுமை வாழ்விற்கு அல்லாஹ்விடம் து ஆ செய்யவும்.வியாழன், 2 பிப்ரவரி, 2012

நீதிமன்றமே நியாயம் இல்லையா? காந்தி தேசமே கேட்பார் இல்லையா?

அன்பார்ந்த சகோதர்களே....

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.கடந்த 1995ல் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பார்சல் குண்டு சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதில் ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அடக்கம்.

இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. இதை தீர்ப்பில் நீதிபதியே குறிப்பிடுகிறார்.தீர்ப்பின் 49ம் பக்கத்தில் 13ம் பாராவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி குறிப்பிடுகிறார்.

Admittedly, There is no eye witness to the occurrence. The prosecution relied upon and put forward the circumstantial evidence to prove it's case.
(அதாவது இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே சாட்சியங்களாக இருக்கின்றனவாம்!)

இந்நிலையில் நேரடி ஆதாரங்கள் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், யூகங்களையும் முன்வைத்து தீர்ப்பளிப்பது என்ன நியாயம்? குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் பாரபட்சத்தோடு & ஒரு முன் முடிவின் அடிப்படையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளதோ என சந்தேகம் வலுக்கிறது.

சாட்சியங்கள் இல்லாத ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கும் முடிவு ஒரு கொடுமை அல்லவா? ஒரு சமுதாயத்தின் முக்கிய தலைவருக்கே இந்நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்ன? நாடு முழுக்க பொய் வழக்குகளில் சிறைகளில் வாடும் அப்பாவிகளின் நிலைதான் என்ன-? நினைக்கும்போது குலை நடுங்குகிறது.

முஸ்லிம்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் இந்திய நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக தீர்ப்பளிக்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.

இந்திய நீதி மன்றங்கள் ஊழல் மயமாகி வருகின்றன. சாதி, மத வெறியர்களின் ஆதிக்கத்தில் திணறுகின்றன. நீதி கொள்ளப்படுகிறது.

வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், எப்படியாவது; யாருக்காவது தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என முன்முடிவோடு நீதிமன்றங்கள் செயல்படுவது என்ன நியாயம்?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் முதல் நாடளுமன்ற தாக்குதல் வழக்கில் சிறையிலிருக்கும் அப்சல் குரு வரை பல அப்பாவிகளின் வாழ்வு இப்படிதான் நசுக்கப்படுகிறதோ...?

நியாயவான்களே! யாரும் மனம் கலங்காதீர்கள்!!
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)

இவ்வழக்கை துணிந்து எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஜே.எஸ்.ரிபாயி உட்பட அப்பாவிகளை மீட்போம்.

நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் அல்ல. அலைகடலை கிழிக்கும் போர் கப்பல்கள் என்பதை ஜனநாயக வழியில் நிரூபிப்போம்.

ஒவ்வொரு வீழ்ச்சியில் இருந்து தான் எங்களின் வளர்ச்சிகள் தொடங்குகின்றன. இதை ஆதிக்க சக்திகளுக்கு சொல்லி வைக்கிறோம்.


-- எம் - தமிமுன் அன்சாரி