வியாழன், 2 பிப்ரவரி, 2012

நீதிமன்றமே நியாயம் இல்லையா? காந்தி தேசமே கேட்பார் இல்லையா?

அன்பார்ந்த சகோதர்களே....

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.கடந்த 1995ல் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பார்சல் குண்டு சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதில் ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அடக்கம்.

இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. இதை தீர்ப்பில் நீதிபதியே குறிப்பிடுகிறார்.தீர்ப்பின் 49ம் பக்கத்தில் 13ம் பாராவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி குறிப்பிடுகிறார்.

Admittedly, There is no eye witness to the occurrence. The prosecution relied upon and put forward the circumstantial evidence to prove it's case.
(அதாவது இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே சாட்சியங்களாக இருக்கின்றனவாம்!)

இந்நிலையில் நேரடி ஆதாரங்கள் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், யூகங்களையும் முன்வைத்து தீர்ப்பளிப்பது என்ன நியாயம்? குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் பாரபட்சத்தோடு & ஒரு முன் முடிவின் அடிப்படையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளதோ என சந்தேகம் வலுக்கிறது.

சாட்சியங்கள் இல்லாத ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கும் முடிவு ஒரு கொடுமை அல்லவா? ஒரு சமுதாயத்தின் முக்கிய தலைவருக்கே இந்நிலை என்றால் சாமானியர்களின் நிலை என்ன? நாடு முழுக்க பொய் வழக்குகளில் சிறைகளில் வாடும் அப்பாவிகளின் நிலைதான் என்ன-? நினைக்கும்போது குலை நடுங்குகிறது.

முஸ்லிம்கள் தொடர்பான வழக்குகளில் மட்டும் இந்திய நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக தீர்ப்பளிக்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.

இந்திய நீதி மன்றங்கள் ஊழல் மயமாகி வருகின்றன. சாதி, மத வெறியர்களின் ஆதிக்கத்தில் திணறுகின்றன. நீதி கொள்ளப்படுகிறது.

வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், எப்படியாவது; யாருக்காவது தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என முன்முடிவோடு நீதிமன்றங்கள் செயல்படுவது என்ன நியாயம்?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் முதல் நாடளுமன்ற தாக்குதல் வழக்கில் சிறையிலிருக்கும் அப்சல் குரு வரை பல அப்பாவிகளின் வாழ்வு இப்படிதான் நசுக்கப்படுகிறதோ...?

நியாயவான்களே! யாரும் மனம் கலங்காதீர்கள்!!
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)

இவ்வழக்கை துணிந்து எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம். ஜே.எஸ்.ரிபாயி உட்பட அப்பாவிகளை மீட்போம்.

நாங்கள் கடலில் மிதக்கும் கட்டுமரங்கள் அல்ல. அலைகடலை கிழிக்கும் போர் கப்பல்கள் என்பதை ஜனநாயக வழியில் நிரூபிப்போம்.

ஒவ்வொரு வீழ்ச்சியில் இருந்து தான் எங்களின் வளர்ச்சிகள் தொடங்குகின்றன. இதை ஆதிக்க சக்திகளுக்கு சொல்லி வைக்கிறோம்.


-- எம் - தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக