செவ்வாய், 13 டிசம்பர், 2011

பத்திரிக்கை நண்பர்களே... இது நியாயம்தானா?

ஜனநாயகத்தில் பத்திரிக்கைத்துறை நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிறது. பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என இம்மூன்றுக்கும் அடுத்த நிலையில் பத்திரிக்கைத்துறை இருக்கிறது. ஜனநாயகத்தின் செவிகளாகவும், விழிகளாகவும் அவை செயல்படுகின்றன.


ஒரு கட்சி ஆட்சி முறை நிலவும் நாடுகளிலும், பலகீனமான எதிர்க்கட்சிகள் செயல்படும் நாடுகளிலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகளாக செய்தி ஊடகங்கள் தான் செயல்படுகின்றன. சமீபகாலமாக ஜனநாயகத்தில் நாங்கள்தான் முதல் தூண் என்பது போல செய்தி ஊடகங்கள் நடந்து கொள்வதாக கருத்தும் & கண்டனங்களும் பரவலாக உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தையே பணிய வைக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாக ஊடகங்கள் கருதுவதும், மக்களின் சிந்தனைப்போக்கை திசைக் காட்டும் கருவிகளாக தங்களை மிகைப்படுத்திக் கொள்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நாகரீகமான அச்சுறுத்தலாகவே அஞ்சப்படுகிறது.


அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாக கருதிக் கொள்ளும் செய்தி ஊடகத் துறையினர், தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கூறிக் கொள்வது வரம்பு மீறிய ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள்.

சரி, அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதியும், சுதந்திரமும் தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொள்ளும் இவர்கள் தங்கள் கடமைகளில் நேர்மையாக செயல்படுகிறார்களா என்றால், ஏமாற்றம் தான் மிஞ்சும். சிறந்த இந்திய நாளிதழ்களில் ஒன்றாக கவனிக்கப்படும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து, பெரியாரிச&திராவிடர் கழக செய்திகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணித்து வருவது ஒரு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

தமிழகத்தில் செயல்படும் பல பத்திரிக்கைகள் மத, சாதி விரோத பார்வையுடன் செய்திகளை வெளியிடுவது தொடர்ந்து நடக்கிறது. அடுத்தவர்களிடம் நேர்மையைத் தட்டிக்கேட்கும் செய்தியாளர்களிடம் நேர்மை இருப்பதில்லை. தலைநகர் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினால், ஒரு செய்தியாளர் குறைந்தது 500 ரூபாயாவது 'லஞ்சம்' கேட்கிறார். ஓரிரு பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு.

செய்தியை வெளியிட பணம் கேட்பவர்கள்; செய்திகளையாவது, வெளியிடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. சில ஊடகங்கள் சிறுபான்மையின கட்சிகளும், சமூக நீதியை வலியுறுத்தும் அமைப்புகளும் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கு தங்கள் செய்தியாளர்களை அனுப்புவதே இல்லை. அந்தளவுக்கு அவர்களிடம் 'நேர்மையும்' 'இதழியல் தர்மமும்' ஊடுருவியிருக்கிறது போலும்!

சிறுபான்மையினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் செய்தியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான் மையோடுதான் வருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அவர்களை எவ்வளவுதான் கண்ணியப்படுத்தினாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் சிறுபான்மை யினருக்கு கொடுப்பதில்லை. அங்கு உபசரிப்பில் குறை இருக்கிறதா? அவர்கள் கருத்துக்களில் தவறு இருக்கிறதா? அல்லது நாங்கள் இந்திய முஸ்லிம்களாக வாழ்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்பதை எல்லாம் அவர்கள்தான் விளக்க வேண்டும்.

பத்திரிக்கைகள் யாரையும் காயப்படுத்தலாம்; சுதந்திரமாக விமர்சிக்கலாம்; மறுதரப்பு நியாயங்களையும், செய்திகளையும் விசாரிக்காமலேயே செய்திகளை வெளியிடலாம்; யாரையும் புறக்கணிக்கலாம்; ஆனால், இதையெல்லாம் யாராவது சுட்டிக் காட்டினால் அவர்கள் மன்றாடி மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்கப்பதும், பழிவாங்குவதும் பல செய்தி ஊடகங்களின் 'தர்மமாக' இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்களுக்கு தலைவலி வந்தால்கூட அது பெரிய செய்தியாகிறது. பிரபலங்கள் வீட்டில் குடும்பச் சண்டை நடந்தால் அது அம்பலப்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? நாட்டுக்குத்தான் என்ன நன்மை? பத்திரிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டாமா? பணம் இல்லாத பொதுநல அமைப்புகள்&சமூக நீதிக்காக களமாடும் கட்சிகளின் வெற்றிகள், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்களின் உழைப்புகள் ஊடங்களில் ஓரங்கட்டப்படுவது நியாயம்தானா?

அத்வானி செல்லும் பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக நேரு, கென்னடி என பலர் முதலில் விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் இரண்டு முஸ்லிம்கள் விசாரிக்கப்படும்போது அது அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? எதிர்மறை செய்திகளைத் தான் இவர்கள் விரும்புகிறார்களா-?

இந்துத்துவ சூழ்ச்சிகளாலும், அரசுகளின் நரித்தனங்களாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களையும், அமைப்புகளையும் செய்தி ஊடகங்கள்தான் கைதூக்கி விட வேண்டும்; வழிநடத்த வேண்டும்; வளர்த்து விட வேண்டும்! அந்த ஜனநாயகப் பொறுப்பு அவர்களுக்கு உண்டு!

விமர்சனத்துக்கு உட்படாதவர்கள் யாருமில்லை, இது ஊடகங்களுக்கும் பொருந்தும்.


- மு.தமீமுன் அன்சாரி
மக்கள் உரிமை தலையங்கம்
நவ.11-17

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

முத்துப்பேட்டையில் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து ‘முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத்’(MUMJ) என்ற பெயரில் பொது ஜமாத்தாக சில காலம் செயல்பட்டு வந்தது ஏதோ காரணமாக அது முடக்கப்பட்டு கிடப்பில் கிடந்து வந்தது. முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் முடங்கியதிலிருந்து ஊர் கேட்பாரற்று கிடந்ததோடு அவரவர்கள் நாட்டாமை போல செயல்பட்டுவந்தார்கள். ஊரின் நலனுக்காக பாடுபட ஓர் தலைமையின் கீழ் பொது ஜமாத் இல்லாமல் இருந்த இந்த தருணத்தில் அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முன் முயற்சியுடன் மீண்டும் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து “முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்” (MMJ) என உருவாகியுள்ளது. கடந்த காலங்களைப்போல தலைவர். செயலாளர். பொருளாளர் என்று இல்லாமல் அணைத்து முஹல்லாவில் இருந்தும் தலா 1 நபர் வீதம் 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த 10 நபர்களையும் கொண்டு அமைப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்குழு தான் எதிர்வரும் காலங்களில் ஊரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் இறைவன் நாடினால். இந்த அமைப்புக்குழுவில் ம.ம.க வின் மாவட்டச் செயலாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக்.M.A., அவர்களும், தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது.BSc.,BL., அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


இந்த அணைத்து முஹல்லா கூட்டத்திற்கு முறையான அழைப்பு கொடுக்கப்பட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நூர் பள்ளியும், ஜாக் அமைப்பின் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகமும் பங்கெடுக்கவில்லை. தலைமையின் கட்டுபாடோ????சனி, 10 டிசம்பர், 2011

திருவாரூரில் தமுமுகவின் பாபரி மஸ்ஜித் மீட்ப்பு போராட்டம்.

தமுமுகவின் பாபரி மஸ்ஜித் போராட்டம் டிசம்பர் 06,2011 - அன்று திருவாரூரில் நடைபெற்றது. தமுமுகவின் மாவட்ட தலைவர் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ.கோவை முஜிபு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் ம.ம.க வின் மாவட்ட செயலாளர் சகோ.முத்துப்பேட்டை மாலிக் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே...சனி, 3 டிசம்பர், 2011

திருவாரூரில் டிசம்பர் 6 ல் – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இழந்த உரிமையை மீட்போம்… இருக்கும் உரிமையை காப்போம்..
நாங்கள் ராமருக்கோ, ராமர் கோயில் கட்டப்படுவதற்கோ, எதிரானவர்கள் அல்லர். உண்மைக்கு மாறாக, ஆங்கிலேய வரலாற்றுப் புரட்டர்களின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை நம்பி பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையும், அங்குதான் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையும் தான் எதிர்க்கிறோம்.அயோத்தியில் உள்ள பிற ராமர் கோயில்களுக்கு நிலங்களை வாரி வழங்கிய பாபர், இந்துக்களின் மீது அன்பைப்பொழிந்தவர். தன் மகன், முகலாய மன்னர் ஹூமாயூனுக்க எழுதிய ஒரு கடிதத்தில், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மாட்டுக்கறி உண்பதைக் கைவிடு என்று கட்டளையிட்டவர். அப்படியிருக்கையில், எப்படி ராமர் கோயிலை இடித்து, மசூதி கட்ட முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.


டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜிதை முன்னிறுத்தி நடத்தும் அறவழிப்ட போராட்டங்கள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வரலாற்று உண்மைகளைப் புரியவைக்க, சட்டத்தின் நீதியை நிலைநாட்ட, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்னையைக் காக்க, இந்தியாவின் பாரம்பரிய புகழின் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க, நல்லிணக்கத்தை வலிமைப்படுத்த நடக்கும் போராட்டம் என்பதை மறக்காதீர்.


அக்டோபர் 30 – 2010 அன்று 61 ஆண்டு கால இவ்வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய வினோத தீர்ப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தது. இப்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம், தன்னை நிரபராதிகள் என நிரூபிக்கத் துடிக்கிறது. அறவழிப்போராட்டங்கள் மூலம் விரைவாக நீதியைப் பெற விரும்புகிறது. எனவே..


பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற உள்ளது.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட நீதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

நேற்று மாலை 5 மணிக்கு முத்துப்பேட்டை தமுமுக அலுவலகத்தில் திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினை சார்ந்த சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் ஜனாப். சம்சுதீன் அவர்கள் கூறுகையில், திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் மற்றும் ஏனைய சகோதரர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமுமுகவானது செய்து கொண்டு வருகிறது என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையினை தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை. மஜீது நிகழ்த்த உள்ளார் என்ற தகவலையும் நமது செய்தியாளரிடம் தமுமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை. முஹம்மது மாலிக் அவர்கள் கூறினார்.


நியாயவான்களே.. பங்கேற்பீர்..

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். திருவாரூர் மாவட்டம்