செவ்வாய், 13 டிசம்பர், 2011

பத்திரிக்கை நண்பர்களே... இது நியாயம்தானா?

ஜனநாயகத்தில் பத்திரிக்கைத்துறை நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிறது. பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என இம்மூன்றுக்கும் அடுத்த நிலையில் பத்திரிக்கைத்துறை இருக்கிறது. ஜனநாயகத்தின் செவிகளாகவும், விழிகளாகவும் அவை செயல்படுகின்றன.


ஒரு கட்சி ஆட்சி முறை நிலவும் நாடுகளிலும், பலகீனமான எதிர்க்கட்சிகள் செயல்படும் நாடுகளிலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகளாக செய்தி ஊடகங்கள் தான் செயல்படுகின்றன. சமீபகாலமாக ஜனநாயகத்தில் நாங்கள்தான் முதல் தூண் என்பது போல செய்தி ஊடகங்கள் நடந்து கொள்வதாக கருத்தும் & கண்டனங்களும் பரவலாக உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தையே பணிய வைக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாக ஊடகங்கள் கருதுவதும், மக்களின் சிந்தனைப்போக்கை திசைக் காட்டும் கருவிகளாக தங்களை மிகைப்படுத்திக் கொள்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நாகரீகமான அச்சுறுத்தலாகவே அஞ்சப்படுகிறது.


அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாக கருதிக் கொள்ளும் செய்தி ஊடகத் துறையினர், தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கூறிக் கொள்வது வரம்பு மீறிய ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள்.

சரி, அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதியும், சுதந்திரமும் தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொள்ளும் இவர்கள் தங்கள் கடமைகளில் நேர்மையாக செயல்படுகிறார்களா என்றால், ஏமாற்றம் தான் மிஞ்சும். சிறந்த இந்திய நாளிதழ்களில் ஒன்றாக கவனிக்கப்படும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து, பெரியாரிச&திராவிடர் கழக செய்திகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணித்து வருவது ஒரு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

தமிழகத்தில் செயல்படும் பல பத்திரிக்கைகள் மத, சாதி விரோத பார்வையுடன் செய்திகளை வெளியிடுவது தொடர்ந்து நடக்கிறது. அடுத்தவர்களிடம் நேர்மையைத் தட்டிக்கேட்கும் செய்தியாளர்களிடம் நேர்மை இருப்பதில்லை. தலைநகர் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினால், ஒரு செய்தியாளர் குறைந்தது 500 ரூபாயாவது 'லஞ்சம்' கேட்கிறார். ஓரிரு பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு.

செய்தியை வெளியிட பணம் கேட்பவர்கள்; செய்திகளையாவது, வெளியிடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. சில ஊடகங்கள் சிறுபான்மையின கட்சிகளும், சமூக நீதியை வலியுறுத்தும் அமைப்புகளும் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கு தங்கள் செய்தியாளர்களை அனுப்புவதே இல்லை. அந்தளவுக்கு அவர்களிடம் 'நேர்மையும்' 'இதழியல் தர்மமும்' ஊடுருவியிருக்கிறது போலும்!

சிறுபான்மையினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் செய்தியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான் மையோடுதான் வருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அவர்களை எவ்வளவுதான் கண்ணியப்படுத்தினாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் சிறுபான்மை யினருக்கு கொடுப்பதில்லை. அங்கு உபசரிப்பில் குறை இருக்கிறதா? அவர்கள் கருத்துக்களில் தவறு இருக்கிறதா? அல்லது நாங்கள் இந்திய முஸ்லிம்களாக வாழ்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்பதை எல்லாம் அவர்கள்தான் விளக்க வேண்டும்.

பத்திரிக்கைகள் யாரையும் காயப்படுத்தலாம்; சுதந்திரமாக விமர்சிக்கலாம்; மறுதரப்பு நியாயங்களையும், செய்திகளையும் விசாரிக்காமலேயே செய்திகளை வெளியிடலாம்; யாரையும் புறக்கணிக்கலாம்; ஆனால், இதையெல்லாம் யாராவது சுட்டிக் காட்டினால் அவர்கள் மன்றாடி மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்கப்பதும், பழிவாங்குவதும் பல செய்தி ஊடகங்களின் 'தர்மமாக' இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்களுக்கு தலைவலி வந்தால்கூட அது பெரிய செய்தியாகிறது. பிரபலங்கள் வீட்டில் குடும்பச் சண்டை நடந்தால் அது அம்பலப்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? நாட்டுக்குத்தான் என்ன நன்மை? பத்திரிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டாமா? பணம் இல்லாத பொதுநல அமைப்புகள்&சமூக நீதிக்காக களமாடும் கட்சிகளின் வெற்றிகள், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்களின் உழைப்புகள் ஊடங்களில் ஓரங்கட்டப்படுவது நியாயம்தானா?

அத்வானி செல்லும் பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக நேரு, கென்னடி என பலர் முதலில் விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் இரண்டு முஸ்லிம்கள் விசாரிக்கப்படும்போது அது அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? எதிர்மறை செய்திகளைத் தான் இவர்கள் விரும்புகிறார்களா-?

இந்துத்துவ சூழ்ச்சிகளாலும், அரசுகளின் நரித்தனங்களாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களையும், அமைப்புகளையும் செய்தி ஊடகங்கள்தான் கைதூக்கி விட வேண்டும்; வழிநடத்த வேண்டும்; வளர்த்து விட வேண்டும்! அந்த ஜனநாயகப் பொறுப்பு அவர்களுக்கு உண்டு!

விமர்சனத்துக்கு உட்படாதவர்கள் யாருமில்லை, இது ஊடகங்களுக்கும் பொருந்தும்.


- மு.தமீமுன் அன்சாரி
மக்கள் உரிமை தலையங்கம்
நவ.11-17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக