சனி, 17 அக்டோபர், 2009

மேற்கத்திய ஊடகச் சொல்லாடல்களில்இஸ்லாமிய அடிப்படைவாதம்-1
அண்மைக் காலங்களில் மேற்கத்திய கல்வி வட்டத்திலும் வெகு மக்கள் தொடர்பு ஊடகங்களிலும் அமெரிக்க ஐரோப்பிய செய்தி முகவர் வட்டத்திலும் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற சொல்லாடல் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக செப்.11 க்குப்பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடலகள் மிக அதிகமாகவே புழக்கத்திற்கு வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் லெபனான், போஸ்னியா மீதான ஆயுத ஆக்கிரமிப்பு இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில்தான் நடந்தேறியது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அல்ஜீரியாவில் நடைபெற்ற சுதந்திர தேர்தல்களின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளை மூடி மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் எகிப்தில் இஸ்லாமிய இயக்கங்களின் மீது நிறைவேற்றப்பட்ட மரண தணடனைகளும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில்தான்.
இப்போது குவாண்டனமாவில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொல்லாடல்தான் பெரிதும் பிரயோகிக்கப்படுகிறது. இது தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என்பவற்றில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியவாதிகள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சோதனைகளை எதிர்கொள்ளவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
மேற்கு ஊடகங்களிலும் மேற்கத்திய புலமைத்துவ வட்டாரங்களிலும் இவ்வாறான சொல்லாடல்கள் எப்போது நடைமுறைக்கு வந்தது? இச்சொல்லாடலகளை கண்டுபிடித்தவர்கள் யார்? அது பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் ஏன் கட்டமைக்கப்பட்டது? அடிப்படைவாதம் குறித்து நமக்குள் எழும் அடிப்படையான வினாக்கள் இவை.
மேற்கத்திய ஊடக வட்டத்தில் 1970களுக்குப் பின்னரே இச்சொல்லாடல்கள் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தன. குறிப்பாக ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர்தான் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பதம் முஸ்லிம் உலகு பற்றி எழுதப்பட்ட மேற்கத்தியர்களின் கட்டுரைகளிலும் ஆய்வுக்குறிப்புகளிலும் பரவலாக இடம்பெறலானது. [Links International Journal of Socialist Review Nov-Sep-Dec 2003, P.10] இதனைப் பயன்படுத்துவோர் அதன் மூலம் எத்தகைய அரசியல் நோக்கை அடைவதற்கு முயல்கின்றனர் என்பதையும் கவனமாக ஆராய வேண்டும்.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இஸ்லாத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் மேற்குலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இடைக்காலத்தில் நடைபெற்ற சிலுவைப்போர் ஐரோப்பிய மனப்பான்மையில் முஸ்லிம்களுக்கெதிரான பகைமையையும், காழ்ப்பையுமே தூண்டியது. இஸ்லாம் மிகப்பெரும் சக்தியாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் காரணியாகவும் 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டின் முதல் அரைக்கூறுகள் வரை விளங்கியது. அப்போதும் இஸ்லாத்தின் அரசியல், பொருளாதார, அறிவியல் முன்னேற்றங்களை கண்டு மேற்குலகு குலைநடுக்கம் கொண்டது. குறிப்பாக இக்காலப் பகுதியில் முஸ்லிம் உலகு அடைந்திருந்த தரச்சிறப்பும் செழுமையுமிக்க நாகரிக வளர்ச்சியும் அறிவியல்துறை விருத்தியும் இஸ்லாமிய சமூகத்தின் மீது மேற்குலகு குரோதம் கொள்ளக் காரணங்களாய் அமைந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக