பாபர் மசூதியை இடித்த இந்து, முஸ்லீமாக மாறிய விநோதம்
1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.
சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.
பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.
இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.
காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக