ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள். இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப்பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில)அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக