Sujatha on Mohammed the Prophet
வணக்கம் இறைவா..!
சுஜாதா
இறைத்தூதர் என்றும் நபிகள் நாயகம் என்றும் அழைக்கப்படும் முஹம்மது நபிகள், அரேபியாவில் துவங்கி இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக்க வந்தார். மனிதர்கள், பல்வேறு கடவுள்களை வழிபட்டு வந்த சூழ்நிலையில் ‘இறைவன் ஒருவனே’ என்பதை நிலைநாட்டுவதும் அந்த ஒரே கடவுளின் கட்டளைகளுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் கற்பிப்பதுமே அவரது குறிக்கோள். ‘இஸ்லாம்’ என்ற வார்த்தைக்கு ‘அமைதி’ மற்றும் ‘அடிபணிதல்’ என்பது பொருள். முஸ்லிம்கள் என்றால், ஏக இறைவனுக்கு அடிபணிபவர்கள்.
இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆனை, முஸ்லிம்கள் கடவுளின் தவறில்லாத வார்த்தைகளாக மதிக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் இப்னு இஸ்ஹாக் எழுதிய வரலாற்றிலிருந்து நபிகளின் வாழ்க்கையை நாம் பெரும்பாலும் அறிகிறோம். அவர், ஏறத்தாழ 570 கி.பி\யில் குறைஷி இனத்தில் மக்காவுக்கு அருகில் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஏழ்மை நிலையில் வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்தார். நபிகளுக்கு ஆறு வயதானபோது, அவரின் சொந்தத் தாயார் இறந்துபோனார். இரண்டு ஆண்டுகள் தாத்தாவுடன் இருந்தார். பின், பெரியப்பா அபுதாலிப் உடன் தன் இளம் வயதுவரை வாழ்ந்தார். நபிகள் இளைஞராக இருக்கும்போது, கதீஜா என்னும் செல்வந்தரான விதவைப் பெண்மணியின் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார். பிறகு அவரையே மணந்தார். நடுவயது வரை அவர் இறைத்தூதர் ஆகவில்லை. ஆனால், அதற்கான அடையாளங்கள் சின்ன வயதிலேயே இருந்தனவாம். கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் நபிகளை ஆசீர்வதித்தது அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்காவுக்கு அருகில் உள்ள ÔஹிராÕ எனும் மலைக் குகையில் நபிகள் அடிக்கடி சென்று, இறைவனைத் தியானித்து வருவார். அவருடைய நாற்பதாவது வயதில், ஹிரா குகையில் தியானத்தில் இருந்தபோது, வானவர் ஜிப்ரீல் தோன்றி, இறைவசனங்களை (வஹீ) ஓதச் செய்தார். குர்ஆனில் 96\வது அத்தியாயத்தில் வரும் முதல் ஐந்து வசனங்களை அவர் முதலில் போதித்தாராம். நபிகளுக்கு அருளப்பட்ட முதல் ஐந்து வசனங்கள்: ‘‘ஓதுவீராக! (நபியே) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்& மனிதனுக்கு; அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.’’_ (அத்தியாயம் 96 : 1&5) அடுத்த பத்து வருஷங்களில் அவருக்கு குர்ஆனின் பல்வேறு வசனங்கள், கடவுளிட மிருந்து ஜிப்ரீல் மூலம் சொல்லப்பட்டன. அதிலிருந்து தன் ஒரே கடவுள் தத்துவத்தை, தன் குடும்பத்தாரிடமும் குழுவினரிடமும் மக்காவுக்கு வரும் பயணிகளிடமும் போதிக்கத் துவங்கினார். இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்ட வசனங்களை, மற்றவருக்கு போதிக்கத் துவங்கினார். அவருடைய இவ்வகையி லான தூய பணியினால் பரவத் தொடங்கிய இஸ்லாம், இன்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த வாழ்க்கை முறையாகவும் மார்க்கமாகவும் விரிவடைந்துள்ளது.
நபிகளின் வெற்றியைப் புரிந்துகொள்ள அவர் வாழ்ந்த சூழ்நிலையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். மிகப் பெரிய அரேபிய நாடு, அவர் காலத்தில் பெரும்பாலும் பாலைவனமாகவும் அதன் மக்கள் நாடோடிகளாகவும் இருந்தனர். அவர்களை ஒருங்கிணைக்க வலுவான ஒரு சக்தியோ, நம்பிக்கையோ இல்லாததால், அரேபிய நாட்டைக் குறித்து மேலை, அண்டை நாடுகள் அச்சம் கொள்ளவில்லை. எப்போதாவது சின்னச் சின்ன அரேபியத் தாக்குதல் களை அண்டை நாட்டினர் சமாளித்து வந்தார்கள். அதன் மக்கள், பல கடவுள்களை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரே கடவுளை நம்பும் யூத கிறிஸ்தவ தாக்கங்கள் அரேபிய நாட்டை ஆக்கிரமித் திருக்க முடியும் என்பதுதான் சம்பிரதாயமான சரித்திரச் சிந்தனை. ஆனால், நடந்தது வேறு. முஹம்மது நபிகளின் பாட்டனார் பெயர் ஹாஷிம். அவர் மக்காவுக்கு வரும் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார். அவ்வாறு பாதுகாப்பு அளிப்பது அவரது குடும்பத் தொழில். ஆகையால், நபிகளும் அதே பாதுகாப்புச் செயலைத் தொடர்ந்து செய்தார். அரேபியர்கள் மற்றும் யாத்ரீகர்களின் கடவுள் தத்துவத்தைப் பற்றி ஹாஷிம் கவலைப்படவில்லை. ஆனால், நபிகள் நாயகம் கவலைப்பட்டார். ‘‘எதற்காகப் பல கடவுள்களைத் தொழுகிறீர்கள்? இறைவன் ஒருவனே!’’ என்று போதித்தார்.
இதனால் மக்கா நகர மக்களிடையே சச்சரவுகள் துவங்கின. ‘என்ன இது... புதுசாக ஏதோ சொல்கிறாரே! இறைத்தூதர் என்கிறார். இவர் சொல்வதில் உண்மையிருப்பது போல் தெரிகிறது. இவரை அனுமதித்தால் ஆபத்து!’ என்ற சச்சரவுகள் எழுந்தன. ஆயினும், நபிகளும் அவரை ஏற்றுக் கொண்டவர்களும் தொடர்ந்து பிரசாரப் பணியில் ஈடுபட்டனர். அதனால் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாயினர். எனவே, தம் தோழர்களில் சிலரை எத்தியோப்பியாவுக்கு அனுப்பிய நபிகள் நாயகம், மக்காவில் இருந்து கொண்டு தன் கொள்கைகளைப் பரப்பினார். கி.பி.622\ல் அவர் மக்காவிலிருந்து யத்ரிபுக்குச் சென்றார். பிற்பாடு இந்த இடம் மதினா என்று அழைக்கப்பட்டது. அவர் பயணம் செய்த அந்த வருடம்தான் இஸ்லாமிய காலண்டரின் முதல் ஆண்டு. இதை Ôஹிஜ்ரிÕ என்பார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் நபிகள், தமக்கு ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட வேத வசனங்களின் அடிப்படையில் தம் பணிகளை விரிவுபடுத்தினார். தினசரித் தொழுகை முறைகள், நோன்புகள், அந்தரங்க சுத்தி, தர்மம், யாத்திரை போன்ற நடைமுறைகளை நிர்ணயித்தார். மக்காவை அவர் மறுபடியும் கைப்பற்றிய போது, ஏக இறை ஆலயத்தில் (கஅபா) இருந்த பல கடவுள்கள் நீக்கப்பட்டு, முழுவதும் இஸ்லாம் பரவியது. எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் மத்திய ஆசியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் பரவியது. பதினோராம் நூற்றாண்டில் துருக்கி, தெற்கு ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளிலும் பரவியது.
இன்று உலகெங்கும் பரவியுள்ளது. நபிகள் காலத்துக்குப் பின் குர்ஆன் வசனங்களை மூன்றாவது கலீஃபா உஸ்மான் காலத்தில் (கி.பி.644656) தொகுக்கப்பட்டது. ஆரம்ப அத்தியாயங்கள் கடவுளின் மகிமை, மகத்துவம், அவரது சக்தி பற்றிக் கூறுகின்றன. பிந்தைய அத்தியாயங்கள், வாழ்க்கை முறை பற்றி விரிவான கோட்பாடுகளைச் சொல்கின்றன. குர்ஆனின் அதிகாரம் பரிபூர்ணமானது. அதை மனப்பாடம் செய்வது முஸ்லிம்களின் ஒரு புனிதக் கடமை. இஸ்லாம் கூறும் கடவுள், எல்லாம் வல்லவன். எல்லாம் அறிந்தவன். எங்கும் நிறைந்தவன். அவனுக்கு இணைதுணை கிடையாது. பாகம் பிரிக்க முடியாது. இதனால் மற்ற கடவுள்களையும் தேவகுமாரர்களையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. வானுலகம் மற்றும் பூவுலகின் உள்ளடக்கமும் அவன்தான். அவற்றைப் படைத்தவனும் அவன்தான். எதையேனும் அவன் படைக்கும்போது, ÔஆகுÕ என்ற ஒரு சொல் போதும்; அது ஆகிவிடும். குர்ஆன் காட்டும் இறைவன் அல்லாஹ், வார்த்தைகளுக்கும் வடிவங்களுக்கும் அகப்படாதவன். அடியார்களுக்கு மிக அருகில் இருப்பவன். உலகின் தேவைகள் எதுவுமில்லாதவன். சிருஷ்டியின் ஒவ்வொரு நுட்பத்தையும் ஒவ்வோர் உயிரையும் அறிந்தவன். நபிகள் நாயகம் இறைத்தூதர்; தத்துவஞானி அல்ல. ஆனால், அவருக்கு அருளப்பட்ட குர்ஆன் வசனங்களை மற்றவர் அலசிப் பார்க்கும்போதும் அதன் மதிப்பை எடை போடும்போதும் இஸ்லாமிய தத்துவ ஞானங்கள் எழுந்து விரிவடைந்தன.
நன்றி nidurseasons.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக