முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவுக்கு இடையே நடந்துவரும் பிரச்சினை திடீரென விசுவ ரூபம் எடுத்துள்ளது. கேரளா உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி வேதனையோடு தமிழக முதல்வர் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் 'முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக 11 ஆண்டுகள் ஆகி தமிழகத்திற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவேளையில் அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பர் என்ற முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்துவிடாமல் இருக்க யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று கண்ணீர் வடிக்கும் கலைஞர், 11 ஆண்டுகளாக முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் வடித்துக் கொண்டிருக்கும் கண்ணீரை கவனிக்கத் தவறிவிட்டார். கடந்த 11 ஆண்டுகளாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் குணங்குடி ஹனிபா, அப்துல் ரஹீம் போன்றவர்கள் விசாரணை சிறைவாசிகளாகவே சிறையில் வாடி வருகிறார்களே, இது அநீதி என்று நீதிமன்றம் சென் றால், அங்கும் பிணை வழங்க தாமதிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகையான நீதி? சிறையாளிகளுக்கு பிணை வழங்க அரசுத் தரப் பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகை நீதி? பதில் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே...!
ஏழு வருடங்கள் முடித்த ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற கைதி கள் கடந்த சில வருடங்களாக அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டு வந்தபோது, அதே போன்று 10 வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்துவிட்ட முஸ்லிம் ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் முஸ்லிம் சமுதாய அமைப்புகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்ட போது இந்த வருடம் (2009) விடுதலையாக ஒருசில வாரங்களே எஞ்சியிருந்த தண்டனையை முழுவதுமாக அனுபவித்து முடித்துவிட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் ஒருசில பேரை மட்டும் விடுவித்தீர்களே... இது எந்த வகை நீதி முதல்வர் அவர்களே...?
இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக எங்கு சென்று முறையிடுவது (இறைவனைத் தவிர) என்று தெரியாமல் உள்ளே அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளும், அவர்களின் குடும் பங்களும், முஸ்லிம் சமுதாயமும் தவித்துக் கொண்டிருக்கிறார் கள். முல்லைப் பெரியாறுக்கு வேதனைப்படும் முதல்வர் முஸ்லிம்களின் வேதனையையும் கவனத்தில் கொள்வாரா?
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணராதவரல்ல தமிழக முதல்வர். எனவே அந்த முதுமொழி பலித்துவிடாமல் இருக்க முதல்வர் உடனே முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஆவண செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக