இடைத்தேர்தல் முடிவுகள்!
புழு சுருண்டது! மாயைகள் உடைந்தது!
பாஜக மத்திய ஆட்சியை கைப்பற்றிய
பிறகு நடைபெற்ற நாடு தழுவிய இரண்டாவது இடைதேர்தலிலும் பா.ஜ.க பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில்
உ.பி.யில் 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களையும், கூட்டணி கட்சியான அப்னாதளம் 1 தொகுதியிலும் வென்றனர். இந்த
வெற்றிதான் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உதவியது.
உத்திர பிரதேசம்
உ.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில்
சட்டமன்றத்தில் 11 தொகுதிகளில் 8 இடங்களை சமாஜ்வாடியும், பாஜக 3 இடங்களையும் வென்றுள்ளன. அங்கு
தேர்தல் நடைபெற்ற, 1 பாராளுமன்ற தொகுதியிலும் சமாஜ்வாடி வென்றுள்ளது.
உபி தேர்தல் முடிவுகள் மிகவும்
முக்கியமானதாகும். நாட்டின் பெரிய மாநிலம் மட்டுமல்ல... அதிக மக்கள் தொகை கொண்ட பல
சாதி, மத மக்கள் சம பலத்தோடு இருக்கும் மாநிலமுமாகும். அங்கு ‘காவிப்படை தளபதி’ அமித்ஷா களமிறங்கினார். இப்போது
பெரும் வெற்றி அடுத்த சட்டமன்றத்தை கைப்பற்ற உதவும் என்றார். ‘லவ்ஜிஹாத்’ என்ற பெயரில் அங்கு சிறு,சிறு கலவரங்களை சிறுபான்மையினருக்கு
எதிராக நடத்திக் கொண்டிருந்தனர். கலவரங்கள் மூலம் அரசியல் அறுவடை செய்யலாம் என
கருதினர் இங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் போட்டியிடததால் அவர்களின் வாக்குகள்
பாஜகவுக்கு உதவும் என்றார்கள். ஆயினும் யாதவர்கள், முஸ்லிம்கள், தலித்துகளில் ஒரு பகுதியினர் ஒன்று
சேர்ந்து சிந்தாமல், சிதறாமல் சமாஜ்வாடிக்கு ஆதரவளித்து பா.ஜ.கவின் கனவை தகர்த்துள்ளனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்திலும்
திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அங்கு அனைத்து
தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்கில்
மூன்று இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் மட்டுமே குறைந்த
வாக்குகளில் வென்றுள்ளது.
குஜராத்
மோடி வித்தைகள் நடைபெற்ற குஜராத்தில், மோடி ராஜினாமா செய்த வடோதரா
பாராளுமன்ற தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டது எனினும் அங்கு வெறும் 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளில் பாஜக வென்றுள்ளது
ஆனால் முன்பு 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
மோடி வெற்றி பெற்றார். இங்கு பாஜவுக்கு முன்பைவிட 2 லட்சத்து 41 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது.
9 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி காவி
கோட்டையை கலகலக்க செய்திருக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி நல்ல
முன்னேற்றத்தை பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்ற 6 தொகுதிகளிலும் முன்பைவிட வாக்குகளை
குறைவாக பெற்றுள்ளது.
அஸ்ஸாம்
அஸ்ஸாமில் தேர்தல் நடைபெற்ற மூன்று
சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரிடத்திலும், முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட
மக்களின் கட்சியான அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக கட்சி (AIUDF)
ஒரிடத்திலும்
வெற்றி பெற்றுள்ளது. இங்கு கடந்த ஒன்றரை வருடங்களாக பல கலவரங்களை காவி
தீவிரவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தி வந்தனர். ஆயினும் பாஜகவால்
மூன்றில் 1 தொகுதியை மட்டுமே குறைந்த வாக்குகளில் வெல்ல முடிந்துள்ளது.
திரிபுரா
திரிபுராவில் காங்கிரசும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்
சமமாக களம் கண்டன. தேர்தல் நடைபெற்ற ஒரே சட்டமன்ற தொகுதியையும் மார்க்ஸிஸ்ட்
கைப்பற்றியுள்ளது இங்கு பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சிக்கிம்
சிக்கிம் மாநிலத்தில் வழக்கம்போல்
மாநில கட்சி அந்த ஒரு சட்டமன்ற தொகுதியை கைப்பற்றி உள்ளது. அங்கு பாஜக சுவடே
தெரியவில்லை.
ஆந்திரா
ஆந்திராவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு
நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் வென்றுள்ளது. இங்கு காங்கிரஸ் மூன்று கட்சிகளாக
உடைந்ததும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் வளர்ச்சியும்
தெலுங்கு தேசத்திற்கு வாழ்வை தந்துள்ளது.
தெலுங்கனா
தெலுங்கானாவில் 1 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல்
நடைபெற்றது அதை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கைப்பற்றிவிட்டது இங்கும் பாஜக
மூன்றாமிடமே பிடித்தது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற
தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 1 தொகுதியில் வென்றுள்ளது. அங்கு
மார்க்ஸிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியிடமிருந்து 1 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது.
இம்மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜகவுக்கு
எதிராக கம்யூனிட்ஸ்டுகளுடனும் கை கோர்க்க தயார் என மம்தா கூறினார். அதை
கம்யூனிஸ்டு கட்சிகள் நிராகரித்தனர். இது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்ய
வேண்டிய நிலைக்கு தோழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டையே மீட்க வந்த இரண்டாம்
வல்லபாய் படேல் என தன்னை கருதிக் கொண்ட மோடியும், இந்துத்துவாவின் புதிய தளபதியாக
முடிசூட்டிக்கொண்ட அமித்ஷாவும், இனி என்ன செய்யப்போகிறார்கள்? என்று தெரியவில்லை. பாராளுமன்ற
வெற்றிகளுக்கு உரிமைக்கொண்டாடிய இவர்கள்தான் இத்தோல்விகளுக்கும் பொறுப்பேற்க
வேண்டும். அளவுக்கு அதிகமான மதவெறி அவர்களையே வீழ்த்திவிட்டது. மக்கள் அதை
ஏற்கவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான
பீதியூட்டல் மூலம் இந்துத்துவ மோகத்தை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யலாம் என
செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அரண்டு போயிருக்கிறார்கள்.
இனிதான் ஆபத்து ஏனெனில் தங்கள்
அரசியலை பாதுகாக்க நாடெங்கிலும் சிறுபான்மையினருக்கு எதிராக புதிய சதிகளை
அரங்கேற்றுவார்களோ என்ற ஐயத்தையும் நிராகரிக்க முடியாது.
- தமிமுன் அன்சாரி
ஆசிரியர் - மக்கள் உரிமை
பொதுச்செயலாளர் ம.ம.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக