கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பும், நமது நிலையும்!
(தீர்பு வெளியான நேரத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் செய்திகளை அவதானிக்கும் தமுமுக நிர்வாகிகள்.)
சமுதாயக் கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நாம் எல்லோரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.482 ஆண்டு கால சிக்கல் எனக் கூறப்படும், பாப்ரி பள்ளிவாசல் விவகாரம் 1870&ம் ஆண்டில் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் பிரச்சினை களை சந்தித்து, 1992 டிசம்பர் 6&ஆம் நாளில் நாடே பதறும் வகையில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அது இந்தியாவின் கறுப்பு நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் தொன்மையான பண்பாடும், நாகரீகமும், மதச்சார் பின்மையும் தகர்க்கப்பட்ட நாள் அது. அன்றிலிருந்துதான் இந்தியா உள்நாட்டு வன்முறைகளினால் தனது பொன்னான வளர்ச்சியை இழந்தது.1949 டிசம்பர் 22&ல், திருட்டுத் தனமாக பாப்ரி பள்ளிவாசலில்; சிலைகள் வைக்கப்பட்ட நாளிலி ருந்து தொடங்கப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 30 அன்று அலஹா பாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அது தீர்ப்பல்ல, இந்தியாவின் நீதி அமைப்பையே கொலை செய்த கொடுமை என்பதுதான் உண்மை.
பாப்ரி பள்ளிவாசல், இரண் டாவது முறையாக ஷஹீதாக்கப் பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அது ஒரு கறுப்பு நாளாகும்.நாங்கள் தலைமையகத்தில் அமர்ந்து ஆங்கிலத் தொலைக்காட் சி சேனல்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் அவர்கள், இது கட்டப்பஞ்சாயத்து முறையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என இடித்துரைத்தார்.அந்த துயரமான தருணத்தில் அவரது வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. அதே கருத்தை இன் னொரு சட்ட நிபுணரான பி.பி.ராவ் அவர்களும் வழிமொழிந்தது மேலும் ஆறுதலாக இருந்தது.
பரபரப்பான தொலைக்காட்சி விவாதங்களின் போது, பிரபல நீதியரசர் ராஜேந்திர சச்சார், “அங்கு பள்ளிவாசல் இத்தனை நாள் இருந்ததே அதைப் பற்றி ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை? அது அனுபவ சொத்து இல்லையா?” என எதிர் கேள்விகளை எழுப்பினார்.ஆனால், காவிகளின் வெற்றிக் கூச்சலில் அவை கண்டுகொள்ளப் படவில்லை.அந்த நேரத்தில் தீர்ப்பு குறித்து தமுமுகவின் கருத்தரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் நமது அலுவலகத்துக்கு படையெடுத் தன. தீர்ப்பு குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. உடனே டெல்லியில் உள்ள நமது நண்பர்களிடமும், அலஹாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நமது பத்திரிக்கை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டேன்.
தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மத்தி யில் கொந்தளிப்பையும், நடுநிலையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப் பதால், நாடு முழுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டதை அறிய முடிந்தது.ஒரு முதிர்ச்சிமிக்க தலைமை இதுபோன்ற தருணங்களில் கொந் தளிப்பை தூண்டிவிடக் கூடாது. மிகுந்த பொறுப்புணர்வை வெளிப் படுத்தி, கருத்துக்களை நிதானமாக வெளியிட வேண்டும். எனவே 5 மணிக்கு தீர்ப்பு வெளியாகி, 6 மணிக்கெல்லாம் பத்திரிகையாளர் களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
தீர்ப்பு எந்நிலையில் வந்தாலும் ஏற்போம் என்றீர்களே? இப்போது என்ன சொல்கிறீர்கள்? என வினவியபோது, இது ஒரு காவி தீர்ப்பு. நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டிருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு நீதிமன்ற நட வடிக்கை என்ற அளவில் ஏற்றாலும், தீர்ப்பில் மாறுபட்ட கருத்து உள்ளதால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இதுகுறித்து பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவுடனும், அகில இந்திய தனியார் சட்ட வாரியத்துடனும் விவாதிப்போம் என்றெல்லாம் பல்வேறு விஷயங்களைக் கூறி னேன். ஆனால் ஒருசில நாளிதழ் கள் முன்னால் உள்ளதையும், பின்னால் உள்ளதையும் கத்தரித் துவிட்டு, நாம் சொல்லாத ஒன்றை “தீர்ப்பை தமுமுக வரவேற்கிறது’’ என்ற வாசகத்தை பிரசுரித்துள்ளன.ஆனால் நக்கீரன் ஏடு நமது கருத்துக்களை உள்வாங்கி சரியாக செய்தி வெளியிட்டது. (தனி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது).
நாம் இந்திய அளவில் கவனிக் கப்படும் இயக்கமாக இருப்பதால் தான், நாம் அழைக்காமலேயே மீடியாக்கள் நமது அலுவலகத்துக்கு ஓடோடி வந்தன.அந்த நேரத்தில் ஏராளமான சகோதரர்கள் தீர்ப்பை எதிர்த்து நமது போராட்டம் என்ன? என்று வினவினார்கள். பலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டநிலையில் பேசினார்கள். பேசியவர்களில் பெரும்பாலும் ஜமாஅத்தினர் என்பதும், அவர்களில் உலமாக் களும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்களின் கோபங்களின் நியாயங்களை உணர முடிந்தது.ஆனால், சமுதாயத்தை சரியாக வழிநடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பு நம்மிடம் இருப்பதால், நாமும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கழித்து நமது கடும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், கொந்தளிப்பான நேரத்தில் அதே கருத்துக்களை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
காரணம், மக்களில் பெரும்பா லோர் சாமானியர்கள். அப்பாவி கள். அவர்களை நெறிப்படுத்துவது நமது தலைமைப் பண்புகளில், சமுதாயக் கடமைகளில் முதன்மை யானது என்பதால், “யாரும் போராட்டங்களில் இப்போது இறங்க வேண்டாம்“ என்று கேட்டுக் கொண்டோம்.காரணம், இந்தியா முழுக்க அன்றைய பொழுதில் பரபரப்பும், நெருக்கடியும் நிலவியது. ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா என இறங்கியிருந்தால் மக்கள் ஒரு சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருப் பார்கள். ஆனால் கட்டுப்பாடு இருந்திருக்கிறது. யாராலும் தடுத்திருக்கவும் முடிந்திருக்காது. வன்முறைகள் நிகழ்ந்திருக் கலாம். துப்பாக்கிச் சூடு கூட நடந்திருக்கலாம். அதன் எதி ரொலி, தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித் திருக்கக் கூடும். தொலைக் காட்சி களில் அதையெல்லாம் பார்த்து, நாடு முழுக்க மக்கள் சாலைகளில் இறங்கி, அது பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
அது நமது எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து, தங்களின் காவி கலவரங்களைத் தொடங்கி ரணகளமாக்கி இருப்பார்கள். நல்லவேளையாக, இறைவனின் அருளால் அப்படி எதுவும் நடை பெறவில்லை.இப்படி எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால்தான் நாம் உடனடியான ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை.இது நீதிமன்றத் தீர்ப்பாக உள்ள நிலையில், பல்வேறு சமூகத்தினரும் நமக்கு ஆதரவாக மாறியுள்ள சூழலில், இதை ராஜதந்திரமாக எதிர்கொள்ளும் முடிவைத்தான் இந்தியா முழுக்க உள்ள முஸ்லிம் அமைப்புகள் எடுத்தன.எல்லோரும் அமைதிகாக்க வேண்டும் என்றும், சமூகநல்லி ணக்கமும், நாட்டின் பொது அமைதியும் கெட்டுவிடக் கூடாது என்றும் எல்லா முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர். எல்லோரின் ஒரே முடிவு, இதை சட்டரீதியாக அணுகி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது.
எனவேதான், நாம் போராட்டங் களைத் தவிர்த்து, முதல் கட்டமாக இத்தீர்ப்பின் அபாயங்களை மக்க ளுக்கு எடுத்துக்கூறும் விதமாக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து மதச்சார்பற்ற, முற்போக்கு பிரமுகர்களை அதில் உரையாற்றச் செய்ய வேண்டும் என்று அக்டோபர்&1 அன்று கூடிய தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு செய்துள்ளோம்.இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 15 அன்று டெல்லியில் நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், தீர்ப்பு குறித்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தமுமுக சார்பில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளேன். அதன்பிறகு பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அகில இந்திய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பரிசீலித்து, நமது தமுமுக சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் விவாதிப்போம்.
அதுவரை பொறுமை காப்போம்.
நீங்கள் மனம் தளராதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். (உண்மையான) இறை நம்பிக்கைக் கொண்டவர் எனில், நீங்களே இறுதியில் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 3:139)
என்றும் அன்புடன்...எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
நக்கீரன் பேட்டி
தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு காவித் தீர்ப்பு. நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தேசிய அளவில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அனைத்து சக்திகளுக்கும் இந்தத் தீர்ப்பு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஏற்படவேண்டுமென்ற அடிப்படையில் இதை வரவேற்கலாமே தவிர, உண்மையில் மேல்முறையீட்டில்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.
தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.
நக்கீரன் அக். 2-5, 2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக