புதன், 29 செப்டம்பர், 2010


அயோத்தி வழக்கு - முத்துப்பேட்டையிலும் போலிஸ் குவிப்பு! கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் 12 நகரங்களில் சிறப்பு போலீஸ் குவிப்பு; ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கு தடை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நாடெங்கும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படும் நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் 32 நகரங்களில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதனால் 16 இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 12 நகரங்கள் பதட்டமான பகுதி என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளோம்.

தமிழக அரசின் உத்தரவுப்படி பதட்டமான பகுதிகள் எது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வேலூர், ஓசூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் உள்ள முத்துப்பேட்டை என கண்டறியப்பட்டு கூடுதலாக பாதுகாப்புக் கென்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு அதிரடிப் டை போலீசார் டி.ஜி.பி. மேற்பார்வையில் இயங்கி வந்தவர்கள் பதட்டமான பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்பு படையில் உள்ள 10 ஆயிரம் போலீசார் நேற்றே அனுப்பப்பட்டுள்ளனர். இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் பதட்டமான பகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ்படை தயாராக வைக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சன்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பதட்டம் குறையும் வரை இந்த சட்டம் அமலில் இருக்கலாம். இதுபோல இன்றும், நாளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடை பெறவில்லை. பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அது போல இன்றும், நாளையும் போலீசாருக்கு பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத வழிபாட்டை சேர்ந்தவர்களும் இந்த சூழ்நிலையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பதட்டமான நகரங்களில் கோவை நகரம் முக்கிய மானது என்று தெரிய வந்துள்ளது. அங்கு எங்களது சிறப்பு படை பணியில் இருக்கும். தேவைப்பட்டால் டெல்லியில் இருந்து துணை ராணுவத்தை வரவழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- மாலை மலர் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக