தமுமுகவின் 16 ஆம் ஆண்டும்.. ! நான்காவது தேர்தல் பொதுக்குழுவும் !
சமுதாய கண்மனிகளே... அஸ்ஸலாமு அலைக்கும்...
பொங்கி வழியும் அருவி ஒன்று ஓடையாக மாறி, நதியாக உருவெடுத்து, பயணம் செய்யுமிடத்தையெல்லாம் பசுமையாக்கி; தன் சேவைகளை சுயநலமின்றி வழங்கும். மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் இதன் வழியாக பலன்களை பெறும். வற்றாத ஒரு நதிபோலத்தான் தமுமுகவின் பணிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துக் கொண்டிருக்கிறது. 1995 -ல் இழந்த உரிமைகளை மீட்போம்; இருக்கும் உரிமைகளை காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து களத்துக்கு வருகை தந்த தமுமுக மிக குறுகிய காலத்தில் வளர்ச்சியையும், எழுச்சியையும் பெற்றது.
அன்றைய முஸ்லிம் பொது தளத்தில் அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், பழனிபாபா ஆகியோரைத் தாண்டி வெகுமக்கள் இயக்கத்தை உருவாக்க முடியுமா? உருவாக்கினாலும் அதை வெற்றிகரமாக வழி நடத்த முடியுமா? என்ற நிலையில்; அணைகளை உடைக்கும் காட்டாற்று வௌ;ளமாய் சமுதாய மக்கள் தமுமுகவின் பின்னால் அணி திரண்டது வரலாற்று வியப்பாகும்.
புதிய பாதை
பல்வேறு ஆற்றல்களை தன்னகத்தே பெற்றிருந்த அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா ஆகியோரின் சேவைகளை, ஆற்றலை அர்ப்பணிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால் நிகழ்ந்த அரசியல் போக்குகளையும், சமுதாயத்தில் ஏற்பட்ட கோப அலைகளையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அல்லது அதற்கேற்றவாறு தங்களது அரசியலை மாற்றிக் கொள்ளவில்லை; இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைதான் தமுமுக மிகுந்த நுட்பத்தோடு நிரப்பியது.
ஜனநாயகமும், அதன் வழியிலான அதிகாரமும், அதை நோக்கிய வெகுமக்களின் போராட்டங்களுமே நவீன அரசியல் ரூ சமூக அமைப்பில் சரியான பாதை என்பதை சுட்டிக்காட்டி; தமுமுக சமுதாயத்திற்கு வகுப்பெடுத்தது. இதை சமுதாயம் ஏற்றதால்தான் தமுமுகவின் பலம் பன்மடங்கு பெருகியது.இதை இந்துத்துவ சக்திகள் எதிர்பார்க்கவில்லை; அரசியல் கட்சிகள் விரும்பவே இல்லை. சமுதாய துரோகிகளால் அங்கீகரிக்கவே முடியவில்லை. ஆம்! சிங்கங்கள் உலா வருவதை கண்டு சிறு நரிகளுக்கு பொறுக்கவில்லை. ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கு யானை பலம் கிடைத்ததாக கருதி துள்ளி எழும்பியது. தமுமுகவுக்கு அரணாக நின்றது.
எதிர் நீச்சல்
அன்றைக்கும் முதல்வராக இருந்த கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சியை தீவிரவாதம் என்று கூறி அழிக்கத் துடித்தார். அடக்குமுறைகளை ஏவினார். கடுமை காட்டினார்.அடக்குமுறைகள்தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு படிக்கட்டுகளாக மாறின. நெருக்கடிகள்தான் தமுமுகவினருக்கு கைத்தடிகளாக உதவின. இறைவனின் பேரருளால் எவராலும் ஒடுக்க முடியாத பேரியக்கமாய் தமுமுக பாய்ச்சல் காட்டியது.பொதுக் கூட்டங்கள் மக்கள் திரளால் நிரம்பி வழிந்தன. போராட்டங்களில் பொதுமக்களின் கோபம் பொங்கியது. ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் ஆர்ப்பரித்தனர். வரலாறு மாறியது.
சமுதாயம் தலை நிமிர்ந்தது. தமிழக அரசியல் கட்சிகள் திரும்பி பார்த்தன. காவல் துறை திகைத்தது. உளவுத்துறை அடங்கியது. நெருப்புக்கு இன்னுமா உறக்கம்? எரிமலை எப்படி பொறுக்கும்? என்ற வெகுஜன வசனங்கள் இங்கேயும் கேட்டது!உருட்டி மிரட்டிய உளவுத்துறை, வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம் என்றது. அராஜகம் செய்த காவல்துறை, எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம் என்றது. அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகள் நாங்களே உங்களைத் தேடி வருகிறோம் என்றன! அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை ஏற்கிறோம் என இறங்கி வந்தனர். ஏமாற்றங்களையே சந்தித்த சமுதாயம், மாற்றங்களை கண்டு மகிழ்ந்தது.
சாதனைகளும் - சரித்திரங்களும்
சொந்த சமுதாயத்தில் பீதியூட்டியவர்கள், பொறாமைக் காட்டியவர்கள், அழிக்க நினைத்தவர்கள் தமுமுகவில் நாங்களும் இணைகிறோம் என்றார்கள். இன்று அவர்களெல்லாம் மாவட்ட பொறுப்புகளில் கூட அங்கம் வகிக்கிறார்கள். ஆம், தமுமுக எதிர்ப்புகளை முறியடித்தது. எதிரிகளை வசப்படுத்தியது. அவர்களை நெறிபடுத்தியது.சாதனைகளுக்கு மத்தியிலும் சில சோதனைகள்! வெற்றிகளுக்கு மத்தியிலும் சில தோல்விகள் என்ற போதிலும் களங்களை இழக்கவில்லை. போராட்டங்கள் நிற்கவில்லை. ஆட்சிகள் மாறின. கூட்டணிகள் மாறின. ஆனால் நமது கொள்கைகள் மாறவில்லை. போர்குணம் இழக்கவில்லை. அதற்காகவே இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை என்ற மற்றொரு களம் உணர்வூட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த வரலாற்று வெற்றியை ஈட்டியதும் முழு சமுதாயத்தின் ஆதரவையும் பெற்ற பேரியக்கமாய் பரிணாமித்தது தமுமுக.சென்னை வாழ்வுரிமை மாநாடு (1999), தஞ்சை பேரணி (2004) டெல்லி பேரணி (2007) இவையெல்லாம் தமுமுகவின் மணிமகுடங்கள்.உள்ளுர் பிரச்சனைகளுக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் நடத்திய வட்டார ரீதியிலான போராட்டங்கள் கிளைகளை வலிமைப்படுத்தின. ஆம்புலன்ஸ் சேவைகள், ரத்ததான ரூ மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், மனித நேய சேவைகள், வட்டியில்லா கடன் வழங்குதல் என பட்டியலிட முடியாத பணிகள் முஸ்லிம்களை தாண்டி, இந்து, கிருத்தவ, தலித் இன மக்களையும் வென்றெடுத்தன.
அரசியல் தலைவர்கள், முற்போக்கு சக்திகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக சேவர்கள் தமுமுகவின் பணிகளை பாராட்டினர். ஊக்கப்படுத்தினர். சுனாமியில் தமுமுக தொண்டர்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றிய சேவைகளை தமிழகமே புகழ்ந்தது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டினார். ஐநா சபைக்கும் சென்றது தமுமுக!
காலத்தின் தேவை
எந்த ஒரு தலைமையும் கால மாற்றத்தை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ற வியூகங்களை வகுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்க வேண்டும். புதிய தேவைகளை பூர்த்தி செய்யும் தொலை நோக்கு பார்வைகள் வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற, கொள்கைகளை இழக்காமல், புதிய பாதைகளை உருவாக்க வேண்டும். அதை தமுமுக செய்ததுஆகவேதான், அந்த பேரியக்கத்தின் புதல்வனாய்; கால மாறறத்தின் அரசியல் தேவைகளை உணர்ந்து மனித நேய மக்கள் கட்சி உருவாக்கம் பெற்றது.
சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன் வைத்து அரசியலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அனைத்து தரப்பு மக்களின் நலன்களை மனிதநேயத்தோடு முன்னெடுக்கவும் தொடங்கப்பட்ட இக்கட்சி இன்று தமிழக அரசியலில் புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொறுப்புகளுக்கு போட்டிகள் நிலவுகின்றன. (எல்லாப் புகழும் இறைவனுக்கே)இந்நிலையில் தான் 2011 ரூல் தமிழகத்தில் முன்னோடி இயக்கம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையிலும், அமைப்பு சட்டவிதிகளின்படியும், ஊழியர்களை புத்துணர்விக்கும் நோக்கோடும் தமுமுகவின் அமைப்பு தேர்தல் நடைபெற தொடங்கியிருக்கிறது.
கோவை (2001) புதுக்கோட்டை (2004) பாபநாசம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பொதுக்குழுவை தொடர்ந்து நான்காவது தேர்தல் பொதுக்குழு சென்னையில் நடைபெறவிருக்கிறது.நாம் அறிந்தவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கான வெகுமக்கள் இயக்கம் ஒன்று கிளை, வட்டம், நகரம், ஒன்றியம், மாநகரம், மாவட்டம், தலைமை என ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளோடு, நேர்மையான முறையோடு, அதற்கேற்ற பொதுக்குழு அமைப்போடு தேர்தல் நடத்தப்பட்டு; அதன் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது தமுமுகவில் மட்டும்தான் என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. உதடுகள் துடிக்கிறது.
இவ்வளவு உயரத்தில்; நெருங்க முடியாத சிகரத்தில் நாம் நிற்பதற்கு என்ன காரணம்? உளத்தூய்மைதான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை இயக்குகிறான் என்ற நம்பிக்கையும், நாம் செய்து வரும் பணிகளுக்கு, நம் மரணத்திற்கு பின்னால் மாபெரும் இறைவன் அதற்கு பரிசளிப்பான் என்ற அசைக்க முடியாத உறுதியும்தான் நமது வெற்றிகளுக்கு காரணங்களாகும்.
எச்சரிக்கையும் - பொறுப்புணர்வும்
16 ஆம் ஆண்டில் நான்காவது தேர்தல் பொதுக்குழுவை தமுமுகவும், முதல் பொதுக்குழுவை மமகவும் சந்திக்கும் இத்தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வேடந்தாங்கலுக்கு சீசன் பறவைகள் வருவது போல் நிறையபேர் வருவார்கள். எங்களையும் உறுப்பினராக்குங்கள் என்பார்கள். பொறுப்புகளை தாருங்கள் என இளிப்பார்கள். இங்குதான், இப்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.குடிகாரர்கள், வட்டி ரூ விபச்சாரம் செய்பவர்கள், சமூகம் முகம் சுழிக்கும் தவறுகளை செய்பவர்கள் நமது கோட்டைக்குள் நுழைந்து விடக்கூடாது. அவர்களை அனுமதித்து விடக்கூடாது.
நமக்கு கூட்டம் வேண்டும். மேலும் பலம் பெருக்க வேண்டும் என்ற ஆவலில் நெறியற்றவர்களை நாம் நுழையவிடக்கூடாது. தமுமுகவை பொறுத்தவரை மார்க்கம் வரையறுக்கும் பண்புகளை மீறாதவர்கள் தேவை.மமகவை பொறுத்தவரை பல்வேறு சமூகங்களும் நம்மை தேடி வரும் நிலையில் அனைவருக்கும் பொது ஒழுக்கத்தை அளவுகோளாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நமக்கு தேவை. அரசியல் கட்சிதானே; யார் வேண்டுமானாலும் வரட்டுமே.... என நினைக்கக் கூடாது. அப்படி ஊசலாட்டத்திற்கு உள்ளாகும் போதுதான் நாம் நீர்த்துப் போகத் தொடங்குவோம். நிலைகுலைய தொடங்குவோம்.எண்ணிக்கைகள் மட்டுமே வெற்றிகளைத் தராது. உறுதியான சிந்தனைகளும், நிலை தடுமாறாத செயல்பாடுகளும், மனிதநேய அணுகுமுறைகளுமே வெற்றிகளுக்கான நிரந்தர களங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
தமுமுகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? மமகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? என்பதை முடிவு செய்து அவர்களை களத்துக்கு தயார் செய்வதுதான் இத்தேர்தலின் நோக்கம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.பாசத்தில் இரண்டும் ஒரு பூச்செடியின் இரண்டு பூக்கள். அதே நேரத்தில் களத்தில் கடற்படைக்கு சில தளபதிகளும், தரைப்படைக்கு சில தளபதிகள் திறமையாளர்களாக இருப்பார்கள். போரின் இலக்கு ஒன்றுதான் என்றாலும் களங்கள் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
தகுதியானவர்கள் யார்?
அதே சமயம் பழையவர்களும் நீண்ட கால உறுப்பினர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல! மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் பொருள் கொள்ளக் கூடாது.பழையவர்களில் செயல்படக் கூடியவர்களும், தகுதியான சிந்தனையாளர்களும், புதியவர்களில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் கொண்ட கதம்ப மாலையாக நிர்வாகங்கள் அமைய வேண்டும் என்பதே இதன் உள்அர்த்தமாகும். எந்த நிலையிலும் கொள்கை ரூ கோட்பாடுகளை ஏற்காதவர்களுக்கு இங்கு இடமில்லை அவர்களில் பழையவர்கள் ரூ புதியவர்கள் என்று பேதமில்லை.
லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையில் 16 ஆம் ஆண்டில் நுழைந்திருக்கிறோம். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சுகத்தையும், நலன்களையும், தொழில்களையும், சொந்த காசுகளையும் இழந்து எண்ணற்ற தியாகங்களை செய்து வளர்த்த இயக்கம் இது! இப்போது அரசியல் வெற்றிகளை குறி வைத்து நகரும் நேரத்தில் பழையவர்கள் என்ற போர்வையில் நெறி மீறியவர்களும், புதியவர்கள் என்ற போர்வையில் சீசன் பறவைகளும், பச்சோந்திகளும் நுழைந்துவிடக்கூடாது.
ரத்தத்தாலும், வியர்வையாலும், கண்ணீராலும் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் வௌ;ளிவிழாவையும், பொன் விழாவையும் இடையில் பல வெற்றி விழாக்களையும் காண வேண்டுமெனில் கொள்கை, கோட்பாடுகள், நெறிமுறைகள், விதிமுறைகளை மீறாத நிர்வாக அமைப்பு அவசியமாகும். இதை எல்லோரும் உணர வேண்டும்.நிர்வாகத் தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெறும் வகையில் தமுமுகவின் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தலைவர்கள் கூட தலையிட முடியாது. தேர்தல் அதிகாரிகள் தேர்தலை மட்டுமே நடத்துவார்கள். நீங்கள்தான் உங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். தவறானவர்களும், நெறியற்றவர்களும், சுயநலவாதிகளும் பொறுப்புகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தி தங்களின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாபெரும் சமுதாயக் கடமையில் கவனம் தேவை என்பதை உரிமையோடு எச்சரிக்கிறேன்.
நன்றி வஸ்ஸலாம்...!
அன்புடன் என்றும் உங்கள் தொண்டன்
பேரா.ஜவாஹிருல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக