திங்கள், 14 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில் சிறைவாசிகள் விடுதலை வேண்டும் குணங்குடி ஹனீபா வேண்டுகோள்.

ராமநாதபுரம்: பாட்சா, அன்சாரி, நளினி, முருகன் உட்பட 600பேரை கோவை செம்மொழி மாநாட்டில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும், என த.மு.மு.க.,வின் மாநில நிர்வாகி குணங்குடி ஹனிபா கூறினார். ராமநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக தவறான தகவல் அடிப்படையில் சிறையில் இருந்தேன். தமிழக சிறைகளில் நான்கு லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 3.5 லட்சம் பேர் விசாரணை கைதிகள். சிறிய வழக்குகளை விரைந்து முடித்து விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும்.





புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறைகளில் கைதிகள் வக்கீல் மற்றும் உறவினர்களிடம் பேசுவதற்காக டெலிபோன் வசதி உள்ளது. அதுபோல் தமிழகத்திலும் டெலிபோன் வசதி ஏற்படுத்த வேண்டும். பாட்சா, அன்சாரி, முருகன், நளினி போன்ற ஆயுள் கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை பொது மன்னிப்பு வழங்கி, தமிழக முதல்வர் கருணாநிதி கோவை செம்மொழி மாநாட்டில் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் மத்திய அரசு 10 சதவீதமும் தமிழக அரசில் ஐந்து சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கச்சத்தீவு மீட்கபட வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க மீனவர்கள் ஆயுதங்கள் கொண்டு செல்ல, அரசு அனுமதிக்க வேண்டும். விழுப்புரம் ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது. கோரிக்கைகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த வேண்டும். வன்முறை தேவையற்றது, இவ்வாறு அவர் கூறினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லகான், த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக