திங்கள், 14 ஜூன், 2010

இராமநாதபுரத்தில் தமுமுக வின் நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா அவர்களிடம் சில கேள்விகள்

இராமநாதபுரத்தில் "நீதி மன்றங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவைகளா?" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றபதற்காக முகவை வந்திருந்த தமுமுக-வின் நிறுவனரும் 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் குற்றமற்றவர் என சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவருமான குணங்குடி ஹனீபா, முன்னதாக நமது அதிகாலை நிருபரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். தனது பதிலில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை பாஷா, முகம்மது அன்சாரி, தாஜீதீன் உள்ளிட்ட 60 முஸ்லிம் சிறைவாசிகளையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முருகன் உட்பட 600-க்கும் மேற்ப்பட்ட தண்டனை சிறைவாசிகளையும் பொதுமண்ணிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


கேள்வி : 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த, நிரபராதியான நீங்கள் தீவிரவாதியாக சித்தறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டிருந்தீர்கள். ஆனால் இந்திய பிரஜைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு இந்திய பிரஜையை கொன்றுவிட்டு, குழந்தைகளையும் கடத்தி பல வன்செயல்களில் ஈடுபட்ட, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா என்ற நபரை இந்திய பிரதமர் கை குழுக்கி ரத்தின கம்பள வரவேற்பளித்தது குறித்து தங்கள் கருத்து என்ன?

குணங்குடி ஹனிபா : அவங்க வந்து (இலங்கை அரசு) மத்திய அரசு சொல்வதையெல்லாம் கேட்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை மத்திய அரசு அரவனைத்து செல்கின்றார்கள். டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பதும் ரத்தின கம்பள வரவேற்பளிப்பதும் மனித நேயத்திற்கு எதிரான செயல். என்னுடைய வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளர். சட்டம் என்ன சொல்கின்றதோ அதுபோல் மத்திய அரசு நடக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.





கேள்வி : டக்ளஸ் தேவானந்தா என்பவர் இந்தியாவில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார், கொலை செய்துள்ளார், பல குழந்தைகளை கடத்தியுள்ளார் இன்னும் இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்களம் கொடுப்பவர்களும் குற்றவாளிகளே என இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. அந்த வகையில் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுக்கு ரத்தின கம்பள வரவேற்பளித்து அடைக்களம் கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியே. அதனால் இந்திய பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீங்கள் உங்கள் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வீர்களா?


குணங்குடி ஹனீபா : நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர், சபாநாயகர் ஆகிய இவர்களைக் கைது செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. சில சட்ட திட்டங்கள் உள்ளன. சட்டம் இது விடயத்தில் என்ன சொல்கின்றது என்பது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களைக் கைது செய்ய வேண்டுமா என்பது பற்றிய உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பதற்காக நமது மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த எனது வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். ஆகவே நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அப்படியே செயல்பட வேண்டும்.






கேள்வி : அனைவருக்கும் பொதுவானது என்று அறியப்படும் இந்திய அரசியல் சாசனம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதா அல்லது அதை அமல்படுத்தக்கூடிய அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இஸ்லாமியருக்கு எதிராக செயல்படுகின்றனவா? உங்கள் கருத்து என்ன?


குணங்குடி ஹனிபா : அரசியல் சாசனச் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அதை அறிமுகப்படுத்தும்போது தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார்கள், இந்தியாவில் பிறந்த ஒட்டுமொத்த இந்தியருக்கும் தேவையான கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளது, அதை நடைமுறைப்படுத்துவதில் ஏதாவது குறைபாடு இருக்குமேயானால் அதற்கு நாங்களோ, இந்த அரசியல் அமைப்பு சட்டமோ பொறுப்பாளி அல்ல. அதை நடைமுறைப்படுத்தக்கூடிய அயோக்கியர்கள்தான் அதற்கு பொறுப்பு, என டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அன்றைக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆக அதை நடைமுறைப்படுத்துவதில்தான் குறைகள் உள்ளதே தவிர அரசியில் அமைப்புச் சட்டத்தில் குறை இல்லை என்பது எனது கருத்து.






கேள்வி : சிறையில் உங்களோடு நளினி முருகன் போன்றவர்களும், பல மாற்று மதத்தவர்களும் இருந்துள்ளார்கள், சிறைத்துறையும் நளினி முருகன் போன்றவர்கள் மீதும் தனது அடக்குமுறையை ஏவியுள்ளது. ஆக, சிறைத்துறையும், அரசும் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் எதிரியாக உள்ளனவா அல்லது ஒட்டுமொத்த அப்பாவி சிறைவாசிகளுக்கும் எதிராக செயல்படுகிறதா?


குணங்குடி ஹனிபா : நடு முழுவதும் சிறைகளில் வாடுபவர்களில் பெரும்பகுதியினர் தாழத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்தான் இருந்து கொண்டுள்ளார்கள். அதாவது சுமார் 2 லட்சம் பேர் பொய்யாக புணையப்பட்ட வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இந்த 2 லட்சம் பேர்களில் இஸ்லாமியரும் உள்ளார்கள். ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஏனைய சமுதாயத்தினரும் உள்ளார்கள். ஆக இது மத்திய மாநில அரசில் இருப்பவர்கள் செய்யக்கூடிய அநீதி அல்ல மாறாக நிர்வாகங்களில் இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளின் அநீதியால் இது போன்ற பொய் வழக்குகள் புணையப்பட்டு அப்பாவிகள் பல வருட காலங்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். எதிர்காலங்களில் இது போல் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப்படவேண்டும் என்றால், ஐயா காமராஜர் அவர்கள் மீதே விருதுநகர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக பொய் வழக்கு போடப்பட்டது. கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் மீது பொய்யாக சதி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது போன்ற விடுதலைக்கு முன்னர் உள்ள நிலை நாட்டின் விடுதலைக்கு பின்னரும் தொடர்கின்றது. ஆக இது போன்று பொய் வழக்குகளில் அப்பாவிகள் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு சீரழிவது தடுக்கப்பட மத்திய மாநில அரசுகளும், நீதித்துறையும் இணைந்து கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.






கேள்வி : நீங்கள் தற்சமயம் எந்த அமைப்பில் அல்லது கட்சியில் உள்ளீர்கள்?

குணங்குடி ஹனீபா : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தனிமனித ஒழுக்கத்திலும், பொதுவாழ்விழும் நேர்மையானவராக உள்ளார். அவரை நான் தலைவராக ஏற்று மீண்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இணைந்து அதன் நிர்வாக குழு உறுப்பினராக எனது பணிகள் மற்றும் பொதுவாழ்க்கை தொடரும் என்பதையும் இந்த நேரத்தில் சமூக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.






அதன் பின்னர் கருத்து தெரிவித்த குணங்குடி ஹனிபா அவர்கள், தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரோடு பேசும் வகையில் கட்டன தொலைபேசி வசதிகள் உள்ளதை பற்றியும் அதே போல் தமிழக சிறையிலும் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரோடு பேசும் வகையில் கட்டன தொலைபேசிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், தற்போது சிறைத்துறை டிஜிபி-யாக உள்ள ஷ்யாம் சுந்தர் அவர்கள் சிறைவாசிகளின் மனித உரிமைகளுக்கு எதிராக உள்ளதாகவும், சிறைவாசிகளையும் சிறை பணியாளர்களையும் சிறிதும் மனிதாபிமானம் இன்றி நடத்துவதாகவும், பொங்கல், தீபாவளி, பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தாரை சந்திப்பதற்கு வழங்கிய அனுமதியும் மறுத்து விட்டார் என்பதையம் தெரிவித்தார். சிறைத்துறை முன்னால் இயக்குனர் நடராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்ப்ட்டு வந்த உள்ளொலி என்ற பத்திரிகையை ஷயாம் சுந்தர் வந்தவுடன் நிறுத்தியது பற்றியும், கனிமொழி அவர்களால் தமிழக சிறைகளில் நடத்தப்பட்டு வந்த சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ததும், பத்திரிகையாளர்களை அந்நிகழ்வில் பங்கெடுக்க இயலாதவாறு செய்தது உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களில் சிறைத்துறை டிஜிபி ஷ்யாம் சுந்தர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவரை தமிழக அரசு உடனடியாக மாற்றி புதிய அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.





செம்மொழி மாநாட்டையொட்டி கடந்த காலங்களில் செய்தது போன்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் கோவை பாஷா, கோவை முகம்மது அன்சாரி, தாஜீதீன் உட்பட 60 முஸ்லிம் சிறைவாசிகளையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சகோதரி நளினி முருகன் உள்ளிட்ட 600 க்கும் மேற்ப்பட்ட சிறைவாசிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திட வேண்டும் என்றும், இதை டாக்டர் கலைஞர் மட்டுமே செய்ய இயலும் என்றும் மற்ற யாராலும் இதை செய்ய இயலாது என்றும் தெரிவித்தார். மேலும் கூறுகையில், கச்சத்தீவு என்பது இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது என்பது உலக வரலாறு. ஆனால் அந்த தீவை இலங்கைக்கு தரைவார்த்து கொடுத்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்போது தங்கள் வலைகளை உலர வைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவை பயன்படுத்தலாம் என்பது முக்கிய ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை ராணுவம் நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்து வருகிறது. இதுவரை ராமேசுவரம், தங்கச்சிமடம், தொண்டி, மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களை சுட்டுக்கொன்று அவர்களின் படகுகளையும் வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தியுள்ளது இலங்கை ரானுவம். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் இருக்கவும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லைவரை சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க உரிய நடவக்கை எடுக்க வேண்டும். சிங்கள ரானுவம் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்போதும நமது காவல்துறை, கப்பல்படை நடவடிக்கை எடுத்து மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் தங்களை இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தற்காத்துகொள்ள தற்காப்பு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விழுப்புரம் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க நிகழ்வாகும். அதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், மத்திய மாநில அரசின் கவனத்திற்கு நமது ஆதங்கத்தை கொண்டு போவதற்கும் ஜனநாயக முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமேயொழிய வன்முறை என்பது தேவையற்றது. ஜனநாயக வழியே சிறந்ததாகும் என்றும் தெரிவித்தார். பேட்டியின்போது தமுமுக மாவட்ட தலைவர் சாதிக், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் சலிமுல்லாகான், நகரச்செயலாளர் பரக்கத்துல்லா, நகரத் தலைவர் சுல்தான் ஆகியோர் உடனிருந்தனர்.



நன்றி - அதிகாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக