புதன், 19 மே, 2010

உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி-கைது: குணங்குடி ஹனீபா நன்றி!

குணங்குடி ஹனீபா அவர்கள் மக்கள் உரிமைக்கு பின்வரும் கடிதத்தை
அனுப்பியுள்ளார்.

அதில் கூறிஇருப்பதாவது :-

என்னை 13 வருடமாக சிறை வைத்துள்ள பொய் வழக்கிற்கு விரைந்து தீர்ப்பு வழங்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னையில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து வரும் 21.5.2010 வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று பூந்தமல்லி பொடா நீதிபதி அறிவித்துள்ளார்கள். அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வழக்கு தீர்ப்பு வழங்கிட பேரணி நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக்கும், தலைமை நிர்வாகிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களுக்கும் பேரணியில் கலந்து கொண்ட சமூக மக்களுக்கும் பேரணி வெற்றி பெற அதற்காக இரவு பகல் உழைத்த சகோதரர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் கரூர் அருகே 5.5.2010 அன்று விபத்தில் மரணம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஆறு சகோதரர்களின் மறுமை வெற்றிக்காக தொடர்ந்து துஆ செய்கின்றேன். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம், இறைவன் நாடவில்லை என்றால் மறுமையில் சந்திப்போம்“. இவ்வாறு தனது கடிதத்தில் குணங்குடி ஹனீபா தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே உடல் நலம் இன்றி இறந்து போன குணங்குடி ஹனீபா அவர்களின் தந்தையின் நல்லடக்கம் கடந்த மே 14 அன்று முகப்பேறு கபருஸ்தானில் நடைபெற்றது. த.மு.மு.க மற்றும் ம.ம.க-வைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அதில் கலந்து கொண்டனர். எப்படியாவது தன் தந்தையின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்று பரோலில் வெளிவர குணங்குடி ஹனீபா முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் “அதிகார சக்திகள்” இவர் சங்கராச்சாரியாரின் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பதாலோ என்னவோ இவருக்கு மனிதாபிமான வாய்ப்பை கூட வழங்கவில்லை. இந்த வேதனையில் துடித்த குணங்குடி ஹனீபாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக