செவ்வாய், 28 செப்டம்பர், 2010


திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்

ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!
திருவிடச்சேரியில் நடந்தது என்ன?

அனைத்து முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?

அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?

மார்க்கம் என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர் படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத் தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில் நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும் தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர் இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.

தகராறுக்குக் காரணம்:-

ரோஸ் பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின் ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின் குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர். மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின் சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

5.9.2010 அன்று மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில் கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள் துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கலாட்டா:-

திருமங்கலக்குடியிலிருந்து பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன் கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது, தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல் ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும் மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத் தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள் பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்மக்கள் பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும் மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள் நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள் சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான் வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர் மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).

தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-

இந்நிலையில் ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர் தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.

ஊர் மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர். வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அப்பாவிகள்:-

வன்முறைக் கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ் (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ததஜவின் முக்கிய தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ, ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது. ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும் தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர் தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.

தமுமுக நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல் தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி ஏது ?

கொலைக் கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன. லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது போலீசாரை அதிரவைத் துள்ளது.

கொள்கைக்கு பின்னடைவு:-

இந்த பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின் மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப் பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.

இந்நிலையில் இத்தகைய வன் முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ் முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள். நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும் திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.

சிந்திக்க வேண்டும்:-

ஏகத்துவ பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ் அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம் முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும் அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம் தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்:-

திருவிடச்சேரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு), திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச் சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

பள்ளிவாசலுக்குள் ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

திருவிடச்சேரியை ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின் வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின் வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.

குடும்பத்தோடு வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள் மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம் தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள் என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள் ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு மறுத்தனர்.

குத்புதீனும் அந்த அமைப்பும்:-

குத்புனுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.நாகை மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே. அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன் முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர் ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.

திருவிடச்சேரியில் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.வன்முறை இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட கண்டிக்காமல் இருப்பது ஏன்?

தற்காப்புக்காக சுட்டாரா?

பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.

@ நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?

@ பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?

@ நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?

@ இதற்கெல்லாம் என்ன பதில்-?

திருவிடச்சேரி மக்கள் கருத்து:-

முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-

இந்த ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர் களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன் மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன் இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர் ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும் எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும் பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின் அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில் ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத் தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.

இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.சமா தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள் அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன் ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.

ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-

இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.இந்த பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும் ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5 கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன் அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-

நான் பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல் இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.

ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்:-

எங்களுக்கும் அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும் அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.என்னுடைய சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம் ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார். பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர். அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம் ஆக்குரென் பாரு என போனார்.இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத் தலைவர், எனது மச்சான் ஹாஜி முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.

பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்):-

சம்பவ நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர் முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’ என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப் பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-

என் கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார்.அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-

‘‘எங்க விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான் வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.

அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-

‘‘விழிதியூர் கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம். நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால் திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.

நன்றி: மதஜ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக