புதன், 18 நவம்பர், 2009

சேலத்தில் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டித்தரக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்


சேலத்தில் பிரபாத் தியேட்டர் எதிரில் உள்ள கபரஸ்தான் எனப்படும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், உடைந்தும் உள்ளதால் அங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அடக்கஸ்தலத்தின் காம்பவுண்ட் சுவரை புதுப்பித்து கட்டித் தரக்கோரி கடந்த ஒன்றரை வருடமாக தமுமுக போராடி வருகிறது.
சேலம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரை தமுமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஆயினும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கை கையாண்டு வந்தனர். இதையடுத்து அடக்கஸ்தலத்தின் முன்பு 30.10.2009 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. இந்நிலையில் அடக்கஸ்தலம் முன்பு போராட்டம் நடத்த சேலம் மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும் தமுமுகவினர் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
30.10.2009 ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு சரியாக 3 மணியளவில் மாவட்டச் செயலாளர் ஏ. சமியுல்லா தலைமையில் தமுமுக கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு குழுமினர். மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் தருமபுரி சாதிக் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சபீர் அஹமத், பொருளாளர் இப்ராஹிம், துணைச் செயலாளர் சுல்தான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடையே மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது தர்பியா வகுப்பெடுத்தார். முஸ்லிம் என்றால் எப்படி இருக்க வேண்டும், தொழுதவனின் நிலை, தொழுகையின் சிறப்புக்கள் மற்றும் தமுமுக செய்துவரும் சமுதாயப் பணிகள் ஆகியவை பற்றி அவர் உரையாற்றினார்.
மாலை 7 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.தமுமுக போராட்டத்தின் காரணமாக மேற்படி அடக்கஸ்தலத்தின் சுற்றுச் சுவர் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், விரைவில் பணிகள் தொடரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக